தமிழ்நாடு

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: ஓய்ந்தது சூறாவளி பிரசாரங்கள் - வாக்குப்பதிவு பணிகள் தீவிரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: ஓய்ந்தது சூறாவளி பிரசாரங்கள் - வாக்குப்பதிவு பணிகள் தீவிரம்

கலிலுல்லா

தமிழ்நாட்டில் சனிக்கிழமை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 26ஆம் தேதி வெளியானது. மனுத்தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 5இல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று, பிப்ரவரி 7ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தலுக்கு குறைவான நாட்களே இருந்ததால், முக்கியக் கட்சிகள் தொடங்கி சுயேச்சை வேட்பாளர்கள் வரை சூறாவளி பரப்புரை மேற்கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக நாள்தோறும் காணொளி மூலம் பரப்புரை மேற்கொண்டார். அவர் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதேபோல் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாவட்டங்களை பிரித்துக் கொண்டு நேரடியாக பரப்புரை மேற்கொண்டனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதே போல், அரசியல் கட்சியினருக்கு சவால் விடுக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் சுயேச்சைகள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுமார் 2 வாரங்களாக நடைபெற்று வந்த சூறாவளி பரப்புரை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதனையடுத்து அந்தந்த வார்டுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க, பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மேயர், துணை மேயர் உள்ளிட்ட ஆயிரத்து 298 பதவியிடங்களுக்கு நடத்தப்படும் மறைமுகத் தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.