தமிழ்நாடு

திருமணத்திற்கு வேலை செய்வதுபோல் வந்த காதலன்! காலையில் மாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருமணத்திற்கு வேலை செய்வதுபோல் வந்த காதலன்! காலையில் மாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

webteam

ஓமலூர் அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், திருமணத்திற்கு வேலை செய்வதுபோல் வந்த காதலுடன் மணப்பெண் வீட்டைவிட்டு வெளியேறியதால், பெண் அழைக்க வந்த மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். கூலி வேலை செய்து வரும் இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில், முதல் இரண்டு மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மூன்றாவது மகள் சோபனாவுக்கும் திருமணம் செய்து வைக்க அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி சோபனாவுக்கு இன்று காலை அங்குள்ள கோயிலில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு சோபனா காணாமல் போயுள்ளார். சோபனாவை காணவில்லை என அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் கிடைக்காததால், பெண்ணின் தந்தை கோவிந்தன், தனது மகளை கண்டுபிடித்து கொடுக்குமாறு ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் தான் திருமணத்திற்கு வேலை செய்வது போல வந்த, அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர், சோபனாவை அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சோபனாவும், பிரகாஷும் ஓமலூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டு ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், இன்று பெண் அழைப்புக்கு வந்த மணமகன் வீட்டார், சோபனா காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து இரு தரப்பு பெற்றோர்களையும் ஓமலூர் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சோபனா, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், “நானும் பிரகாஷூம் இரண்டு வருடம் காதலித்து வந்தோம். ஆனால், எனக்கு என் வீட்டில் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க எனது அப்பா ஏற்பாடு செய்தார். அதனால் தான் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு சென்று, எங்களது விருப்பப்படி திருமணம் செய்து கொண்டேன்” என்றும் கூறியுள்ளார்.

அப்போது பெண்ணின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தங்களால் அவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்று கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து பிரகாஷின் பெற்றோருடன் காதல் திருமணம் செய்த தம்பதியை போலீசார் அனுப்பி வைத்தனர்.