ஹெல்மெட் அணிந்து சைக்கிளில் சென்ற சிறுவன் - இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து நேரில் அழைத்து பாராட்டிய திருச்சி மாநகர காவல் ஆணையர் புது சைக்கிள் வழங்கினார்.
விலை மதிப்பற்ற மனித உயிரை கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்களால் இழக்க நேரிடுவது வருத்தத்துக்குரியது. இது போன்ற விபத்துக்களை தவிர்க்க தலைக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு அறிவுறுத்துகிறது. காவல்துறையும் இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பிரச்சாரங்களையும் செய்வதுடன் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கிறது.
ஆனால் இன்றும் பலர் தலைக்கவசம் அணியாமல் அசுர வேகத்தில் வாகனங்களில் செல்வதை காணமுடிகிறது. இந்த சூழலில் திருச்சி மல்லிகாபுரத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் சாமியப்பன், தனது அப்பா ஆசையோடு வாங்கித் தந்த மிதிவண்டியில் செல்லும் போது மறக்காமல் தலைக்கவசத்தை அணிந்து செல்கிறான்.
இது ஒருபுறம் நகைப்புக்குரியதாக இருந்தாலும்கூட பலரும் இதனை வரவேற்கின்றனர். இதுகுறித்து அச்சிறுவன் கூறுகையில்... மிதிவண்டியில் செல்லும் போதெல்லாம் மறக்காமல் தலைக்கவசம் அணிந்து செல்வேன். தலைக்கவசம் உயிர்க்கவசம். விபத்து எந்த ரூபத்திலும் ஏற்படலாம் ஆகையால் முன்னெச்சரிக்கையாக தலைக்கவசம் அணிந்து செல்கிறேன்.
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறேன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் சிறுவனையும், அவனது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து பாராட்டியதோடு புது சைக்கிள் ஒன்றையும் ஹெல்மெட் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.