மணப்பாறை இரயில்வே மேம்பால சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழை நீரில் உயிரிழந்த வாலிபரின் சடலம் மீட்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பிரதான நுழைவு வாயில் பகுதி ரெங்கவிலாஸ். இப்பகுதியில் மழை பெய்தால் அங்குள்ள இரயில்வே மேம்பாலத்தின் சுரங்க பாதையில் மழை நீர் தேங்குவது வழக்கம். அப்படி மழைப் பெய்யும் போதெல்லாம் அங்கு மக்களின் பயன்பாடு முடங்குவதோடு துர்நாற்றமும் வீசும் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில் கடந்த சனிக்கிழமை பெய்த மழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் வாலிபர் ஒருவர் உயிரிழந்து மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் உயிரிழந்த வாலிபர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த ஓட்டுனர் ஜாகீர்ஹூசேன் என்பது தெரிய வந்தது.
கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு மாயமான அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். வாலிபரின் இறப்புச் செய்தி கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். மாலையில் ஜாகீர்ஹூசேனின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுரங்க பாதையில் தேங்கும் மழை நீரை நிரந்தரமாக அப்புறப்படுத்தும் பணியினை நகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.