தமிழ்நாடு

”2024 தேர்தலில் எதிர்கட்சிகள் தனியாக போட்டியிட்டால் பாஜகவை வரவேற்பதாகிவிடும்”-திருமாவளவன்

”2024 தேர்தலில் எதிர்கட்சிகள் தனியாக போட்டியிட்டால் பாஜகவை வரவேற்பதாகிவிடும்”-திருமாவளவன்

sharpana

”வரும் 2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் திட்டமிட்டு பாரதிய ஜனதா கட்சியை வரவேற்பதாகி விடும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில்,

”நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது என்பதை பலரும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மற்றும் ஆதரவாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒன்றும் பெரிய வெற்றி அல்ல. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. 2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் திட்டமிட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு வரவேற்பதாகி விடும். தற்போது உத்தரபிரதேசத்தில் நடந்திருப்பது அதுதான்.

மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த முறை மாற்றப்படவேண்டும் நேரடியாக மக்கள் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுப்பது போல ஒன்றியக் குழுவின் தலைவரை மாவட்ட குழு தலைவரை நகர மன்ற தலைவரை, மேயரை மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்க கூடிய வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகள் கூட்டணி கட்சிகளால் கைப்பற்ற இயலாமல் போய்விட்டது. உடனடியாக திமுக தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் தம்முடைய திமுக போட்டி வேட்பாளர்களை பதவியை ராஜினாமா செய்யும்படி அறிக்கை வெளியிட்டது அரசியல் நாகரிகத்தின் ஒரு உச்சநிலை அதற்காக அவருடைய பண்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார பாராட்டும்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் அகில இந்திய அளவில் சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரால் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது ஒரு அரசியல் முன்னணியாக ஒரு மாற்று அரசியல் சக்தியாக உருப்பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இடதுசாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணி வெற்றிகரமாக இயங்குகிறது. இந்தியாவுக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடி ஆகியிருக்கிறது வழிகாட்டியாக இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு காங்கிரசோடு இணைந்து இடதுசாரிகளை இணைத்து சக்திகளை வீழ்த்த வேண்டும் என்ற வியூகத்தை அமைத்து அதில் வெற்றி பெற்று சாதித்த ஒரு மாநிலமாக தமிழ்நாடு ஒரு கட்சியாக விளங்குகிறது.

4 வழிச்சாலையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் அமைக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. புதுச்சேரியில் முத்தமிழ் நுழைவாயில், காமராஜர் நினைவு தூண் இடிக்கப்பட்டிருப்பது காமராஜருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது இதனை நான் கண்டிக்கிறேன். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் முயற்சி 1000 கோடி ஒதுக்கியுள்ளார்கள். இது குறித்து விவாதிக்க தமிழக முதலமைச்சர் ஒரு அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்ட வேண்டும்” என்று பேசினார்.