தமிழ்நாடு

ஆன்மிகத்தின் பிறப்பிடம் தமிழகம்.. இங்கிருந்து தான் இந்தியா முழுவதும் சென்றது- ஆர்.என்.ரவி

ஆன்மிகத்தின் பிறப்பிடம் தமிழகம்.. இங்கிருந்து தான் இந்தியா முழுவதும் சென்றது- ஆர்.என்.ரவி

webteam

காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே இருந்த தொப்புள் கொடி உறவை ஆங்கிலேயர்கள் சிதைத்ததாக தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி விமர்சித்துள்ளார்.

சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவன் அரங்கில் பவன்ஸ் கலாச்சார விழா 2022 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், திரைப்பட பின்னணி பாடகர் வாணி ஜெயராம், தொழிலதிபர் நல்லிகுப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு செய்ததுக்காக பவன்ஸ் விருதும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் ஆளுநர் கையால் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர், பாடகி வாணி ஜெயராம் பவன்ஸ் விருது பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். 1930களில் ஆங்கிலேய ஆட்சியால் இந்தியா பாதிக்கப்பட்டதை இந்திய தலைவர்கள் உணர்ந்தார்கள். அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ரீதியில் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவை சிதைத்தது. இந்திய வளங்களை விரைவாக கொண்டு செல்லும் நோக்கோடு ஆங்கிலேய ஆட்சி அப்போது செயல்பட்டதாகவும், அது மட்டுமல்லாமல் இந்தியர்களிடம் இருந்த கலாச்சார, ஆன்மிக ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் சிதைத்ததாக ஆளுநர் குற்றம் சாட்டினார்.

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே இருந்த தொப்புள் கொடி உறவை ஆங்கிலேயர்கள் சிதைத்து விட்டதாக அவர் விமர்சித்தார்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் காசி மற்றும் ராமேஸ்வரம் இடையே பயணம் செய்தனர் ஆனால், அதை ஆங்கிலேயர்கள் தடுத்தனர். இந்தியர்கள் நாம் ஆன்மீக ரீதியில் ஒற்றுமையாக இருந்தோம் ஆனால், நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் ஒடுக்க நினைத்தனர். இதற்கு எதிராக காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர், அதன் விளைவாக தான் பாரதி வித்யா பவன் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாக பேசினார்.

மேலும் தமிழகம் தான் ஆன்மீகத்தின் ஊற்று, இங்கிருந்து தான் பல ஆன்மீக பெரியவர்கள் இந்தியா முழுவதும் ஆன்மிகத்தை எடுத்து சென்றனர். காசி தமிழ் சங்கம், மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் அதில் பங்கேற்க தங்களை பதிவு செய்து வருவதாக கூறினார்.