தமிழ்நாடு

ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் 613 கிலோ எடையுள்ள மணி - மதுரையில் பிரம்மாண்ட வரவேற்பு

ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் 613 கிலோ எடையுள்ள மணி - மதுரையில் பிரம்மாண்ட வரவேற்பு

webteam

அயோத்தி ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் 613 கிலோ எடையுள்ள வெண்கல மணிக்கு மதுரையில் மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ராமர் கோயிலுக்கு காணிக்கைகள், தங்கம் மற்றும் வெள்ளியிலான செங்கற்கள், பல்வேறு புனித தலங்களின் மண் மற்றும் புனிதநீர் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராமர் கோயிலுக்கு 613 கிலோ எடையுள்ள வெண்கலத்தில் செய்யப்பட்ட மணி மற்றும் ராமர், சீதை, லட்சுமணர் விக்ரகங்கள் அடங்கிய ராமரத யாத்திரை வாகனம் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு இரவு மதுரை வந்தடைந்தது. சென்னையில் உள்ள சட்ட உரிமைகள் குழு தேசிய பொதுசெயலர் ராஜலட்சுமி மன்தா ஏற்பாட்டில் 613 கிலோ வெண்கலத்தால் செய்யப்பட்ட ராட்சத கோயில் மணி வைக்கப்பட்ட ராமரத யாத்திரை வாகனத்திற்கு மதுரை கேகே நகர் பகுதியில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பயணம் செய்து 21வது நாளில் அயோத்தி சென்றடையும் எனக் கூறபட்டது.