தமிழ்நாடு

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் ஜூன் 6-ல் தொடங்க வாய்ப்பு : மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் ஜூன் 6-ல் தொடங்க வாய்ப்பு : மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

webteam

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 900 எம்.பி.பி.எஸ். இடம் இருந்து வரும் சூழலில் தற்போது கரூரில் 150 இடங்களுடன் கூடிய புதிய மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டு முதல் இந்த இடங்களில் மாணவர்கள் நிரப்பப்பட உள்ளனர். இதுதவிர திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் மொத்தமுள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான விண்ணப்ப விநியோகத்தைத் ஜூன் 6ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எனினும், விண்ணப்ப விநியோகத்துக்கான அரசாணை வெளியான பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது. இதனால் நீட் தேர்வில் தகுதி பெரும் மாணவர்கள், கடந்தாண்டை போல தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 95 இடங்களுக்கான அனுமதி காத்திருப்பு நிலையில் உள்ளதால் அதுவும் அனுமதி கிடைத்துவிடும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றன.