தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குப் பல்வேறு அரசுத் துறைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 3,473 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்..
2022, ஜூலை 31-ம் தேதி வரை, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (TANGEDCO) வர வேண்டிய நிலுவைத் தொகை 3,473.72 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் மட்டும் 1,986.53 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. 909.68 கோடி ரூபாய் நிலுவையுடன், உள்ளாட்சி அமைப்புகள் அடுத்த இடத்தில் உள்ளன. சென்னை மாநகராட்சி, கல்வித் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை போன்றவையும் பாக்கி வைத்துள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் அரசுத் துறைகளின் மின் கட்டண பாக்கி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவை உடனடியாக தங்களுடைய நிலுவைத் தொகையைச் செலுத்தினால்தான், மின் உற்பத்தியாளர்களுக்குத் தர வேண்டிய கடனைச் செலுத்த முடியும் என்கிறார் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர்.
நிலுவைத் தொகை குறித்து தமிழக அரசு பட்டியல் வெளியிட்டவுடன், பாக்கி வைத்துள்ள துறைகளின் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அதன்பிறகு, நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவார்கள். மீதமுள்ள நிலுவைத் தொகை அடுத்த ஆண்டுக் கணக்குக்குச் சென்றுவிடும். இதனால்தான் அரசுத் துறைகளிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்கிறார் அந்த அதிகாரி.
அனைத்து நுகர்வோருக்கும் தடையில்லா, தரமான மின்சாரம் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. மின் உற்பத்தியாளர்களுக்கான கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்த வேண்டியுள்ளது. அதற்காக, நாங்கள் எந்த வங்கியிலும் கடன் வாங்க முடியாது. பாக்கி வைத்துள்ள அரசுத் துறைகள் தங்களுடைய நிலுவைத் தொகையைச் செலுத்தினால்தான் நாங்கள் எங்களுடைய கடனை அடைக்க முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
- சிவகுமார்