திருவாரூர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் சில தினம் முன்பு அறிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. ஜனவரி 10ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 11ம் தேதி முதல் வேட்பு மனுவை திரும்ப பெறலாம் எனவும், மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு இன்று முதல் வழங்கப்படுகிறது. இதற்கான விருப்ப மனு அளிக்கும் நிகழ்வை, அதிமுக தலைமை அலுவலகத்தில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றனர். விருப்ப மனுக்களை பெறுவோர் நாளை மாலைக்குள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் மீதான பரிசீலனை நாளை மறுதினம் மாலை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். இதனிடையே திருவாரூர் இடைத் தேர்தலில் அதிமுக வரலாற்று வெற்றி பெறும் என அமைச்சர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.