இறந்த குட்டியுடன் 4 நாட்களாக உணவு தண்ணீர் இன்றி கூட்டத்தோடு சோகமாக தாய் யானை காத்து நிற்கிறது.
நீலகிரி மாவட்டம் எல்லையில் அமைந்துள்ளது கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம். இங்குள்ள முத்தங்கா சரணாலயத்தை ஒட்டிய குறிச்சியாடு வனப்பகுதியில் பிறந்து இரண்டு மாதமே ஆன யானைக் குட்டி ஒன்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து கிடப்பதை வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், அந்தக் குட்டி இறந்த இடத்தில் தாய் யானை உட்பட நான்கு யானைகள் உணவு, தண்ணீர் இன்றி அங்கிருந்து அகலாமல் நின்றிருக்கிறது. இதையடுத்து பட்டாசு வெடித்தும் சத்தங்கள் எழுப்பியும்கூட அந்த யானைகளை விரட்ட முடியாத நிலை உள்ளது.
இதனால் யானைகளை அங்கிருந்து விரட்டிய பின்னரே குட்டியை உடற்கூறு ஆய்வு செய்ய முடியும். அதன் பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குட்டி யானை இறந்து நான்கு நாட்கள் ஆகிய நிலையில், இறந்த குட்டி அருகே நான்கு நாட்களாக உணவு தண்ணீர் இன்றி பாசத்துடன் தாய் யானை உட்பட நான்கு யானைகள் நிற்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.