அரசுப்பள்ளியில் சர்சைப்பேச்சு புதிய தலைமுறை
தமிழ்நாடு

”எடுக்கப்படும் நடவடிக்கை தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும்” - அன்பில் மகேஸ்!

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் என்ற பெயரில் பிற்போக்குத்தனங்களை விதைக்கும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அசோக் நகரில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை விதைக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினர் கண்டங்களை தெரிவித்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளியில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசியுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், அதில், “அரசு பள்ளியில் சிறப்பு விருந்தினர் சர்ச்சைக்குரிய பேசிய வகையில் பேசிய விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி இதுப்போன்ற சம்பவம் நடைபெறாதா வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த விவகாரத்தில் இப்போது எடுக்கப்படும் கடும் நடவடிக்கை என்பது தமிழகத்தில் அனைத்துப்பள்ளிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கும் .” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முக ஸ்டாலின் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என்று பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும், இதற்கு பல தரப்பினர் தங்களின் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திருமதி சோ மதுமதி:

"கல்விக்கு சம்மந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி அரசு அனுமதி இன்றி பள்ளிகளில் நடத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

எம்.பி. ஜோதி மணி

”அரசு பள்ளியில் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அரசாங்கத்தின் கருத்தியல் போராட்டத்தின் அனைத்து முயற்சிகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். அடிப்படையான அறிவியல் கோட்பாட்டிற்கு எதிராக பேச யாரை அழைத்தாலும், அனுமதித்தாலும் அதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

தி.க. மதிவதினி

”பகுத்தறிவு கருத்துகளை பேச அனுமதி கேட்க அத்தனை சிக்கல், இவர்களுக்கு எப்படி அனுமதி கிடைக்கிறது? யார் அழைக்கிறார்கள்? அந்த மனிதர் பேச்சில் அத்தனை பிற்போக்குத்தனம், தலைக்கணம். மாணவர்கள் ஏதோ செய்யக்கூடாத குற்றங்களை செய்து மன்னிப்பு கேட்கும் குற்றவாளிகள் போல அழச் செய்வதில் ஆசிரியர்களுக்கு அப்படி என்ன ஆனந்தம்?” என்று பதிவிட்டுள்ளார்.

எம்.பி. கார்த்திக் சிதம்பரம்

”தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கூடத்தில் ஒரு குட்டிப் பைத்தியக்காரனைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.” என்று அமைச்சர் அன்பில் மகேஸை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய மாணவர் சங்கம் சார்பாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்தில், பள்ளியில் ஆன்மீகம் என்ற பெயரில் ஆபாச கருத்தைதான் மகாவிஷ்ணு என்பவர் பேசி இருக்கிறார். எனவே, காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அதிகாரி மார்ஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.