தமிழ்நாடு

கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது நாகூர் ஆண்டவர் தர்காவின் 466-வது `கந்தூரி விழா'

கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது நாகூர் ஆண்டவர் தர்காவின் 466-வது `கந்தூரி விழா'

webteam

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் கோலாகலமாக நேற்று துவங்கியது.

புகழ்பெற்ற இஸ்லாமிய வழிபாட்டு தலமான நாகூர் தர்காவின் 466-ம் ஆண்டு கந்தூரிவிழா இன்று கொடியேற்றத்துடன் நேற்று இரவு கோலாகலமாக துவங்கியது. கந்தூரி விழாவின் கொடியேற்றத்திற்காக வருடந்தோறும் பயன்படுத்தப்படும் சிறப்புக் கொடியானது சிங்கப்பூரிலிருந்து நாகைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் முதுபக்கு எனும் இந்த சிறப்புக்கொடியை எடுத்து வரும் கப்பல் வடிவரதம், செட்டிபல்லக்கு, சாம்பிராணிசட்டி போன்ற ரதங்கள் ஊர்வலமாக நாகையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக நாகூர் வந்தடைந்தன.

பேண்டு வாத்தியம் முழங்க, ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து வந்த பக்கீர்மார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடியினை வரவேற்றனர். அதனை தொடர்ந்து நாகூர் தர்காவில் கொடிக்கு தூ-வா ஓத, வாணவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. அப்போது வண்ணமயமான வான வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. கந்தூரி விழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நாகூர் ஆண்டவரை பிராத்தித்து துவா செய்தனர்.

கந்தூரி விழாவையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு கருதி நாகை மற்றும் நாகூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நாகூர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத்-எனும் சந்தனக்கூடு விழா ஜனவரி 2,ம் தேதி நாகையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளாக வலம்வந்து மூன்றாம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது.