திருமாவளவன், மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

2 ஆவது முறையாக வீடியோவை டெலிட் செய்த திருமா! | “முறிவை நோக்கி செல்லும் கூட்டணி..” - தராசு ஷ்யாம்

Angeshwar G

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோவை அவரது எக்ஸ் தள பக்கத்தில் மீண்டும் பதிவிடப்பட்டு நீக்கப்பட்டிருப்பது புதிய விவாதத்துக்கு வழி வகுத்துள்ளது.

அண்மையில் பேசிய இந்த வீடியோவை, சமூக வலைத்தளப் பக்கத்தில் காலை 8.43 மணிக்கு பதிவிட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். சுமார் 11 மணியளவில் அந்த வீடியோவை அவர் நீக்கிவிட்டார். சில விநாடிகளிலேயே, டெலிட் செய்யப்பட்ட அதே வீடியோவை, 'ஆட்சியில் பங்கு' என்ற கேப்ஷனோடு அவர் பதிவிட்டார். அதனையும் உடனடியாக அவர் நீக்கிவிட்டார். எதற்காக இந்த வீடியோவை பதிவிட்டார்? இதன்மூலம் யாருக்கு என்ன சொல்ல வருகிறார்? மீண்டும் மீண்டும் பதிவிட்டு நீக்குவதற்கு என்ன காரணம்? என தெரியாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.

கூட்டணியில் கசப்பு?

அமெரிக்காவில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. எனவே, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தான் பேசிய வீடியோவை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பிய நேரத்தில், தொல்.திருமாவளவன் வெளியிட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், இந்த வீடியோ மூலம் புதிய சர்ச்சைக்கு திருமாவளவன் வித்திட்டுள்ளார்.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' - திருமாவளவன்

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம், “கூட்டணியில் கசப்பு தட்டுவதாகத்தான் நான் உணர்கிறேன். திமுகவிற்கும் விசிகவிற்கும் இடையிலான கூட்டணி முறிவை நோக்கி செல்வதாகத்தான் உணர்கிறேன். எனக்கு தெரிந்து திமுக அதிகாரத்தில் பங்கு தராது.

கூட்டணி முறிவிற்குத்தான் கொண்டு செல்லும்

தராசு ஷ்யாம்

திமுக கூட்டணி முறிவதற்கோ, திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கோ பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இம்மாதிரியான கோரிக்கைகள் வைக்க வைக்க, முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வரவர, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும், விசிக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றும். அது இயல்பாகவே கூட்டணியை முறிவு நிலை நோக்கித்தான் கொண்டு செல்லும்.

இது விசிகவின் ஆரம்பகால கோரிக்கைகளில் ஒன்றுதான். ஆனால், திமுக அதற்கு தயாராக இல்லை. அதிமுக தயாராக இருக்குமா என்பது பெரிய கேள்வி” என தெரிவித்துள்ளார்.