உதயநிதி - தராசு ஷ்யாம் - இபிஎஸ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

உதயநிதிக்கு முக்கியத்துவம்.. இபிஎஸ்-க்கு வரப்போகும் சிக்கல்! இருதுருவ அரசியலை சொல்லும் தராசு ஷ்யாம்!

PT WEB

திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கட்சி ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் கடந்த சில மாதங்களாக முன்னிலைபடுத்தப்பட்டு வருகிறார். அந்தவகையில் கட்சி சார்பில் தொடர்ந்து ஆளுநர், பாஜக, அதிமுக குறித்து கடும் விமர்சனங்களையும் அவர் முன்வைத்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்

இதற்கிடையே திமுக-வின் வரலாற்றிலேயே இப்போதுதான் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி என்று இம்மூன்றும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கின்றன. இப்படியான நகர்வுகள் திமுக-வுக்கு எப்படி இருக்கும், அதிமுக-வுக்கு இது என்ன மாதிரியான அழுத்தத்தை கொடுக்கும், திமுக - அதிமுக முன்னெடுக்கும் அரசியல் என்ன என்பது குறித்தெல்லாம் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் புதிய தலைமுறைக்கு பேசினார்.

முன்னிலைப்படுத்தப்படும் உதயநிதி!

“உதயநிதி ஸ்டாலின் எல்லாவற்றிலும் முன்னிலைபடுத்தப்பட்டு வருகிறார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீட் ரத்துக்காக நடந்த உண்ணாவிரதப் போராட்டதில் சவால் விடுத்து பேசியது தொடங்கி இந்தி எதிர்ப்பு போராட்டம், கச்சத்தீவு மீட்பு, ஆளுநர் எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது என்ற அரசியல் பார்வை வரை... இப்படி எல்லாவற்றிலும் அவர்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார். அதற்கு ஏற்றபடிதான் அவரும் செயல்படுகிறார். நீட் போராட்டத்தில் அனிதாவின் ஆவணப்படத்தை பார்த்துவிட்டு கண் கலங்கியதைகூட இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடிக்கு என்ன சிக்கல்?

எடப்பாடி பழனிசாமி விஷயத்தில், அவர் மதுரையில் நடத்திய மாநாடானது, பிரம்மாண்டமான மாநாடு என்ற வகையில் பெரும் வெற்றிதான். அதில் மாற்றுகருத்து கிடையாது. ஆனால் மாநாட்டிலே அவருக்கு கொடுக்கப்பட்ட செங்கோல், பட்டமெல்லாம் தேர்தல் வெற்றிக்கு பின்னால்தான் அவருக்கு உறுதிப்படுத்தபடும்.

eps

இபிஎஸ் தேர்தல் வெற்றியில் பல சிக்கல்கள் உள்ளன. முக்கியமாக ஓ.பன்னீர் செல்வம் ‘40 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். அக்டோபர் மாதம் காஞ்சிபுரத்திலிருந்து தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கிறோம்’ என்கிறார்.

டிடிவி தினகரனும் ஒரு திருமண நிகழ்ச்சியில் ‘நானும் ஓ.பி.எஸ்-ம் இணைந்து செயல்படுவோம். எடப்பாடியிடமிருந்து அதிமுக-வை மீட்போம். திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே மாற்று அமமுக தான்’ என்று கூறுகிறார். ஆக அதிமுகவின் இபிஎஸ் - ஓபிஎஸ் பிரச்னை ஒருபக்கமும், மூன்றாவதாக இன்னொரு துருவமும் இங்கே வருகிறது. ஆனால் நிதர்சனத்தில் தமிழ்நாடு அரசியலென்பது 2 துருவங்களுக்குதான் பழக்கப்பட்டது.

ஓபிஎஸ், டிடிவி தினகரன்

“அண்ணாமலை விஷயத்தில் கவனமாக இருக்கிறார்கள்...”

கூடுதல் சிக்கலாக, அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உள்ள ஈக்குவேஷன்தான் சரி இல்லை என்பதும் உள்ளது. இப்போது கூட்டணியில் இருப்பது இவர்கள்தான். ஆனால் இவர்களுக்கே சிக்கல் உள்ளது. ஒரு கூட்டணி என்பது, இரண்டு தரப்பு தொண்டர்களுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஏற்பட காரணமாக இருக்க வேண்டும். உதாரணமாக 1998 ல் திருநெல்வேலியிலே அதிமுக-வின் வெள்ளி விழா மாநாடு நடைபெற்றது. மாநாடு நடந்து அடுத்து இரு மாதத்தில் தேர்தல் இருந்தது. ஆகவே அம்மாநாடு மிக முக்கியமாக பார்க்கப்பட்டது. இதை உணர்ந்து அம்மாநாட்டுக்கு பாஜக-வின் அத்வானி, பாமக-வின் ராமதாஸ் உட்பட எல்லா கூட்டணி தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

EPS, Annamalai

அப்படி கலந்து கொண்டால் மட்டும்தான் அந்த தொண்டர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படும். அத்தகைய ஒரு ஒருங்கிணைப்பாக இந்த அதிமுக மாநாடு தெரியவில்லை. அதேபோல திமுக-வின் நீட் எதிப்பு போராட்டத்திலும் மற்ற எந்த கட்சி தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை.

ஆக இவர்கள் இருவருமே மீண்டும் அந்த இருதுருவ அரசியலை (அவரவரின் கட்சிகள் முன்னிலைப்படுத்துவதை) நிலைநிறுத்ததான் பார்கிறார்கள். அதிலும் குறிப்பாக ‘கட்டாயம் அண்ணாமலைக்கு எந்த விதத்திலும் எந்த விதமான அரசியல் இடமும் கொடுக்கக்கூடாது’ என்பதில் இரண்டு தரப்புமே குறியாக இருப்பது, நன்றாக தெரிகின்றது.” என்றார் தராசு ஷ்யாம்.

- ஜெனிட்டா ரோஸ்லின் .S