தஞ்சாவூர் அருகே உள்ள கீழவஸ்தாசாவடி அவன்யூ நகரை சேர்ந்தவர் இந்திராணி. நேற்று முன்தினம் கார்த்திகை திருநாள் என்பதால் இவர் தனது 2 மகள்களுடன் வீட்டுவாசல் முன்பு விளக்கேற்றியுள்ளார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கம்பி வேலியைப் பிரித்துக் கொண்டு முகமூடி அணிந்து வேட்டியுடன் மர்மநபர்கள் இருவர் வந்துள்ளனர்.
அவர்கள் வருவதைப் பார்த்து இந்திராணியின் மகள்கள் “திருடன்.. திருடன்...” எனப் பதற்றத்தில் கூச்சலிட்டுள்ளனர். அவர்களை நெருங்கி வந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி "சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம்" எனக் கூறி அவர்கள் கழுத்தில் கிடந்த தங்க நகைகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணும் அவருடைய தாயும் பதற்றமடைந்து வீட்டுக்குள் ஓடியுள்ளனர். ஆனால் கொள்ளையர்கள் அவர்களையும் விடாமல் துரத்திச் சென்று வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
அதற்குள் அந்தப் பெண் கதவை மூடியதால் நீண்ட நேரம் போராடிவிட்டு பின்னர் கொள்ளையர்கள் சென்றுள்ளனர். அப்போது ஒரு கொள்ளையன் திடீரென அறிவாளி போல் யோசிப்பதாக நினைத்து, கைப்பிடியில் பதிவான தங்களுடைய கைரேகையை அழிக்க நினைத்துள்ளார். இதற்காக கதவில் பதிந்திருக்கும் கைரேகையை தனது முகமூடியைக் கழற்றி துடைத்துவிட்டு பிறகு அங்கிருந்து சென்றுள்ளான்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிக் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலிசார் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.