தமிழ்நாடு

தஞ்சை: கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து நூதன மோசடி... நகை கடை முன் குவிந்த பொதுமக்கள்

தஞ்சை: கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து நூதன மோசடி... நகை கடை முன் குவிந்த பொதுமக்கள்

webteam

‘நகைக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம்’ என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர் தலைமறைவானார்.

தஞ்சை மாவட்டத்தில் பிரபல நகைக்கடையான அசோகன் தங்க மாளிகை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கடை தஞ்சை மட்டுமின்றி திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளிலும் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நகைக்கடையில் `சிறுசேமிப்புத் திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். வீட்டுமனை, சிறுசேமிப்பு திட்டம் பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தரப்படும்’ எனக் கூறி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என தஞ்சை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விளம்பரம் செய்துள்ளனர்.

இதனை நம்பிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதையடுத்து வங்கிகளில் அடமானம் வைத்த நகைக்களை மீட்டு, வட்டி இல்லா கடன் என்ற ஆசையில் அசோகன் நகை கடையில் அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் நகைகளை மீட்பதற்காக கடைக்குச் சென்றபோது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடையிலுள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் அனைத்தையும் காலி செய்துவிட்டு, கடையை காலி செய்துள்ளனர்.

இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல் துறையினர் புகார் அளிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை கிழக்கு காவல் நிலையம், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியதை அடுத்து அவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

ஏழை எளிய மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் ஆசை வார்த்தை நம்பி, மிகவும் சிரமப்பட்டு உழைத்த தொகையை தங்களுக்கு மீண்டும் பெற்றுத் தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.