தார் தொழிற்சாலை புதிய தலைமுறை
தமிழ்நாடு

தஞ்சை: தார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் துகள்கள்.. மூச்சுமுட்டுவதாக மக்கள் வேதனை!

தஞ்சை அருகே செயல்பட்டு வரும் தார் தொழிற்சாலையால் மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படும் பொதுமக்கள். வீடு முழுவதும் தூசியாகி ஆஸ்துமாவில் வரும் அபாயம் உள்ளதாக வேதனை.

PT WEB

செய்தியாளர்: ந.காதர் உசேன்

தஞ்சாவூர் அருகே விளார் என்ற ஊராட்சியில் பொட்டுச்வாச்சாவடி, தியாகி சுந்தரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் நகரின் மைய பகுதியில் சாலை போட பயன்படுத்தும் ஜல்லி கலவையோடு தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.

இங்கு 24 மணி நேரமும் செயல்படும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை, ரசாயன வாடை, காற்றில் பரவும் மாவு போல் உள்ள தூசி துகள்களால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றில் பரவும் துகள்களால் வீடு, வீட்டில் உள்ளே பொருட்கள், வாகனங்கள் மீது தூசி படிந்து பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், “சொந்தமாக வீடு கட்டி நிம்மதியுடன் வாழலாம் என்று இப்பகுதியில் குடியேறினோம். குடியேறிய நாள் முதல் நோயுடன் வாழ வேண்டிய நிலைக்குக் தள்ளப்பட்டுள்ளோம். இதனால் பல பேர் வீடு கட்டியும் இங்கு குடிவராமல், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கன் என அனைவருக்கும் சுவாச பிரச்னையும், வாந்தி, குமட்டல் போன்ற உபாதைகளும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. எனவே, குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஓராண்டாக செயல்படும் இந்த தார் கலவை தொழிற்சாலைகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும், இந்த தொழிற்சாலைக்கு மாசு கட்டுபாட்டு வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளதா, குடியிருப்பு பகுதிகளில் செயல்பட அனுமதி உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது கறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் வேதாவிடம் கேட்டபோது, “உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம்” என தெரிவித்தார். ஆலை நிர்வாகத்திடம் கேட்டபோது “பொதுமக்கள் எங்களிடமும் தொழிற்சாலையால் தாங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து வருகின்றனர். தொழிற்சாலையை வேற இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைந்து மாற்றப்படும்” என தெரிவித்தனர்.