செய்தியாளர்: ந.காதர்உசேன்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பகட்டுவான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (60). இவரும் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் பகட்டுவான்பட்டியில் இருந்து தஞ்சாவூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேளாங்கண்ணியில் இருந்து கொல்லம் சென்ற அரசு விரைவு பேருந்து, அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் காவல்நிலைய போலீசார், உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வல்லம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.