தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மகளிர் போலீஸ்: டிஐஜி பாராட்டு

மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மகளிர் போலீஸ்: டிஐஜி பாராட்டு

நிவேதா ஜெகராஜா

கும்பகோணத்தில் சாலையில் பிரசவ வலியால் துடித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அப்பகுதி மகளிர் காவல்துறையினர் பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் நலமுடன் காப்பாற்றியுள்ளனர். 

கும்பகோணம் பொற்றாமரைகுளத்தின் கிழக்கு கரையில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தங்கியுள்ளார். யாரிடமும் பேசாமலும், யாசகமும் பெறாமலும், எவருக்கும் தொந்தரவு ஏதும் செய்யாமலும் அங்கேயே இருந்து வருகிறார் அவர். யாராவது அவருக்கு உணவு கொடுத்தால் மட்டும் அதை வாங்கி சாப்பிட்டு நாட்களை கடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பெரிய நைட்டி மட்டுமே அணிந்திருந்தால் அவர் கர்ப்பமாக இருந்தது வெளியே தெரியவில்லை.

இதையடுத்து நேற்று காலை பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரைக்கு மேற்கு காவல் நிலையத்தின் முதல்நிலை தலைமை காவலர் சுகுனா என்பவர் ஏதேச்சையாக சென்றபோது, அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சுவரில் சாய்ந்து கொண்டு முனகி கொண்டிருந்திருக்கிறார். அவர் பிரசவ வலியால் துடிப்பதை உணர்ந்த சுகுனா, உடனடியாக அவர் அருகில் சென்று பார்த்த போது அவருக்கு ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. உடனடியாக மேற்கு காவல் நிலையத்துக்கு வந்து அங்கிருந்த சில பெண் காவலர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு அவர் முதலுதவி செய்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அப்பெண்ணை பாதுகாப்பாக சேர்த்தனர். மேலும் அப்பெண்ணிற்கு உதவியாக இரண்டு பெண் காவலர்களையும் காவல் ஆய்வாளர் அனுப்பிவைத்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதால், அந்த பெண்ணிடமிருந்து அவர் குடும்பம் குறித்தோ, அவரை கர்ப்பமாக்கிய நபர் குறித்தோ எந்தவித தகவலையும் காவலர்களால் பெறமுடியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இப்பெண் குறித்தும், அவரின் பிரசவ வலி குறித்தும் காவல் ஆய்வாளர் பேபி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியாவுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பிரசவம் நடந்த இடம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், மேற்கு காவல் நிலையத்தின் பெண் காவலர்கள் அனைவரும் அங்கு சென்று அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றியதை கேட்டு எஸ்பி ரவளிப்பிரியா பாராட்டு தெரிவித்தார். 

இதற்கிடையில் இந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், கர்ப்பமாக காரணமாக இருந்த நபரை மகளிர் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த பெண் ஒரே இடத்தில் இருந்ததால் யார் அப்பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்பது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, பாலக்கரையைச் சேர்ந்தவர் ஒருவர் அடிக்கடி வந்து அப்பெண்ணை சந்தித்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று நள்ளிரவு அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் பாலக்கரைக்கு சென்று அங்கிருந்த ஜான் (40) என்பவரை பிடித்து விசாரித்த போது, அவர்தான் இந்தப் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து, கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆதரவற்ற பெண்ணுக்கு மனிதாபிமானத்தோடு பிரசவம் பார்த்ததும், உடனடியாக குற்றவாளியை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி, அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷினி, பெண்ணுக்கு பிரசவம் பார்க்க உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் சரிதா, முதல் நிலை பெண் காவலர் சுகுனா ஆகியோரை இன்று தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஸ்குமார் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து வெகுவாக பாராட்டி, பாராட்டு சான்றிதழை வழங்கினார்.