அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கி விட்டு தப்பியோடிய இளைஞரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஊரணிபுரம், வெட்டிக்காடு வழியாக கந்தர்வகோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை, காட்டாத்தி என்ற இடத்தில் திடீரென ஒருவர் கல்வீசி தாக்கியுள்ளார். இதில், பேருந்தின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறியது. திடீரென நடந்த இந்த தாக்குதலால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதையடுத்து கல்வீசிய அந்த நபரை அங்கு நின்ற பொதுமக்கள் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர், வயல் வெளியில் புகுந்து தப்பித்து ஓடினார். இருந்தும் பொதுமக்கள் அந்த நபரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் அந்த நபரிடம் விசாரித்தபோது தான் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என இந்தியில் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரை கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அந்த நபரை போலீசார் விசாரித்தபோது தான் கராச்சி என்று தெரிவித்தார். மேலும் அவரிடம் எந்த அடையாள அட்டையும் இல்லாத நிலையில், அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கல்வீசி பேருந்தை தாக்கினார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.