Thangar bachan pt desk
தமிழ்நாடு

”போராட்ட குணம் இல்லாத உங்களுக்கெல்லாம் எதற்கு ஓட்டு?” - பொதுமக்களை திட்டித்தீர்த்த தங்கர் பச்சான்!

திமுக கூட்டணி கடந்த ஐந்து ஆண்டில் 38 எம்பிகளை வைத்து எதுவும் செய்யவில்லை, தற்போது 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை என பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் குற்றச்சாட்டினார்.

webteam

செய்தியாளர்: கே.ஆர்.ராஜா

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருதாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருதகிரிஸ்வரர் திருக்கோயிலில், கடலூர் பாராளுமன்றத் தொகுதியின் பாமக வேட்பாளராக களம்கண்ட தங்கர்பச்சான் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனக்கு வாக்களித்த மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், ”சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 38 இடங்களை வென்று கொடுத்தார்கள். அவர்கள் 38 இடங்களை வென்று என்ன செய்தார்கள்?. தற்போது 40க்கு 40 வெற்றியை மக்கள் கொடுத்துள்ளார்கள். அவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்?.

public

பொதுமக்கள், தேர்தலில் நிற்கக்கூடிய ஆட்கள் சரியான ஆட்களா? என்று பார்த்து வாக்களிப்பதில்லை, ஒவ்வொரு சின்னத்திற்கு பின்னால் நேர்மையற்றவர்கள் ஒளிந்துள்ளார்கள், கடலூர் தொகுதியில் தோற்ற நான், மக்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், கடலூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரை எங்கு சென்று பார்ப்பீர்கள்? அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியுமா? அவர்கள் உங்களுக்கு உதவப் போகிறார்களா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரிகளை காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்கிறார்கள். அவர்களைதான் நீங்கள் தேர்ந்தெடுக்குறீங்க. இதெல்லாம் பிரச்னையா தெரியலையா?. வீட்ல நடக்குற எல்லா குற்றங்களுக்கும் குடிதான் முக்கிய காரணம். போராட்ட குணம் இல்லாத மக்களாகிய உங்களுக்கெல்லாம் எதற்கு ஓட்டு” என்று கேள்வியெழுப்பினார்.