தமிழ்நாடு

தட்கல் முறையில் 11 ஆயிரம் மின் இணைப்புகள் - அமைச்சர் தங்கமணி 

webteam

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு 11 ஆயிரம் மின் இணைப்புகள் தட்கல் மூலமாக வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

கேள்வி நேரத்தின் போது பேசிய தாம்பரம் உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தன் தொகுதிக்குட்பட்ட கணபதிபுரம், அசோக்நகர் பகுதிகளில் மின்மாற்றிகள் அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, தாம்பரம் பகுதியில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடங்களிலே மின்மாற்றிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மாற்று இடங்கள் தேடப்பட்டு வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர் இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக மின்மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

மேலும் தாம்பரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1830 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதைவிட கம்பிகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பணிகள் தொடங்கப்பட்டால் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

தொடர்ந்து துணைக்கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதா? இதுவரை எவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன? எத்தனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, கடந்த ஆண்டுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் வருடத்திற்கு பத்தாயிரம் இணைப்புகள் என நிர்ணயிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் 19 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு கஜா புயல் தாக்கத்தால் தட்கல் முறையில் மின் இணைப்புகள் வழங்க முடியவில்லை எனவும் இந்த ஆண்டு பத்தாயிரம் மின் இணைப்புகள், மற்றும் கடந்த ஆண்டுகளில் மீதமுள்ள ஆயிரம் இணைப்புகள் என மொத்தமாக இந்த ஆண்டு 11 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு தட்கல் முறையில் வழங்கப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.