தமிழ்நாடு

ஈரான் கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழரை மீட்க நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி உறுதி 

ஈரான் கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழரை மீட்க நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி உறுதி 

webteam

பிரிட்டன் சிறை வைத்திருக்கும் ஈரான் எண்ணெய் கப்பலில் சிக்கியுள்ள தமிழக கப்பல் பொறியாளர் நவீன்குமாரை விரைவில் மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.

சிரியா நிறுவனத்துக்காக கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை, பிரிட்டன் சிறைபிடித்து வைத்துள்ளது. பொருளாதார தடைகளை மீறி, ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்டதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரிட்டன் தெரிவித்திருந்தது. அந்தக் கப்பலில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த நவீன்குமார் என்பவர் கப்பல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 

அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே நவீன்குமாருடன் சேர்த்து இந்தியர்கள் 18 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெய்சங்கரும் பதிலளித்திருந்தார். 

இந்தச் சூழலில், திருச்செங்கோடு சென்ற மின் துறை அமைச்சர் தங்கமணி, நவீன்குமாரின் வீடடிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது நவீன்குமாரை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.