செய்தியாளர்: ரமேஷ்
2006-10 காலகட்டத்தில் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகிய இருவரும் அமைச்சர்களாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக 76 லட்சத்து 40 ஆயிரத்து 433 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022 ம் ஆண்டு உத்தரவிட்டது.
அதேபோல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக, 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே கே எஸ் எஸ் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து 2023 ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இப்படியாக, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன
இதையடுத்து இந்த இரு வழக்குகளையும் கடந்த 2023 ஆம் ஆண்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
முந்தைய தீர்ப்பின் உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அதன்கீழ் கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை துவங்கியது. வழக்குகளில் அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்நிலையில் அவ்வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார்.
அதில் “தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.