தமிழ்நாடு

“ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும்" தங்க தமிழ்ச்செல்வன்

“ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும்" தங்க தமிழ்ச்செல்வன்

webteam

திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளதால் நான் திமுகவில் இணைந்துள்ளேன் என்று திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைந்து கொண்டார். அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பற்றி அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ்ச்செல்வன் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இதனால் தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் அறிவித்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை இன்று சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். மேலும் தங்க தமிழ்செல்வனுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து கொண்டனர். 

திமுகவில் இணைந்த பின் தங்கதமிழ்ச்செல்வன் அண்ணா அறிவாலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் திமுகவில் இணைந்துள்ளேன் என்று கூறினார். அதிமுகவில் இருந்த வந்த பலருக்கும் திமுக நல்லதே செய்துள்ளது. “மாற்றான் தொட்டத்து மலருக்கும் மனம் உண்டு” என்று அண்ணா சென்னதை போல அதனை கடைபிடிக்கும் தலைவர் ஸ்டாலின் என்பதை நான் ஏற்று கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகாவில் ஒற்றை தலைமை இருந்ததால் தான் திமுக வெற்றி பெற்றது. அதிமுக-வில் ஒற்றை தலைமை இல்லை, குழப்பமாக இருக்கிறது. அதிமுகாவை பா.ஜ.க இயக்கி வருகிறது.அதனால் என் தன்மானத்தை இழந்து நான் அதிமுகாவில் போய் சேரவில்லை என்றார்.கலைஞர் இறந்த நாளில் ஸ்டாலின் நீதிமன்றம் சென்று மெரினாவில் இடம் பெற்றார். அதற்காக நான் அவரை பாரட்டுகிறேன், ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி என்று தமிழ்ச்செல்வன் கூறினார். மேலும் பதவி என்பது கேட்டுப் பெறுவது அல்ல. உழைப்பை பார்த்து கொடுப்பது; என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.