தமிழ்நாடு

 “எம்பியாக தேர்வு செய்யப்படும்வரை வைகோ எதுவும் பேசவில்லை” - தமிழிசை 

webteam

பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து தற்போது சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என கே.எஸ்.அழகிரி மற்றும் வைகோ இடையிலான மோதல் குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், “பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை வெற்றிகரமாக நடைபெற்று வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. நாளை முரளிதரராவ் சென்னையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். தமிழகத்தில் ஒரு வலுவான சக்தியாக பாஜக வளர்ந்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் வைகோவும் கே.எஸ்.அழகிரியும் சண்டை போட ஆரம்பித்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸும் திமுகவும் தான் என சொல்லிக் கொண்டிருந்தார். 

தேர்வு செய்யப்படும் வரை எதுவுமே பேசாமல் தேர்வு செய்த பின்பு இன்று காங்கிரசை குறை சொல்கிறார். வைகோ சொல்வதிலும் சில கருத்துக்கள் இருக்கிறது கே.எஸ்.அழகிரி சொல்வதிலும் சில கருத்துக்கள் இருக்கிறது. பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்தார்கள். அதனால் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக இதன் பின்னால் இருக்கிறது என்று எப்போதும் போல் குறை சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். 

நேர்மறை அரசியலில்தான் பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதும் விருப்பம். எல்லா எதிர்க்கட்சிகளும் காஷ்மீர் பிரச்சினையை ஆதரிக்கிறார்கள். இந்த விஷயத்தில் ஸ்டாலின் தனிமைப் படுத்தப்படுகிறார். காஷ்மீர் மக்களின் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்பட வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள் என்று பிரதமர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.” எனத் தெரிவித்தார்.