தமிழ்நாடு

இணையதளத்தில் கிளி விற்ற திமுக பிரமுகர் மகன் கைது!

இணையதளத்தில் கிளி விற்ற திமுக பிரமுகர் மகன் கைது!

webteam

தாம்பரத்தில் செல்லப்பிராணிகளுடன் பச்சைக் கிளியும் விற்பனை செய்த கல்லூரி மாணவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை கிழக்கு தாம்பரம் வினோபா நகரை சேர்ந்த திமுக பிரமுகர் ராஜேந்திரன். இவரின் மகன் தமிழன்பன் (22). எம்.ஏ படித்து வரும் இவர், செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். வீட்டில் பூனை, புறா, நாய் ஆகிய செல்லப்பிராணிகளை வளர்த்து வந்துள்ளார். 

இதுமட்டுமின்றி குருவிக்காரர்களிடம் குறைந்த விலைக்கு பச்சைக்கிளியை வாங்கி, இணையதளத்தில் விளம்பரம் செய்து விற்பனை செய்தும் வந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த வனத்துறை காவலர்கள், வாடிக்கையாளர்கள் போல தங்களுக்கு வளர்க்க கிளி வேண்டும் என்று இணையத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். 

தாம்பரம் ஏர்போர்ஸ் சாலை அருகே ரூ.3000 கொண்டு வருமாறு தமிழன்பன் கூறியுள்ளார். வனத்துறை காவலர்களும் சீருடை அணியாமல் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு பச்சைக்கிளியை கொடுக்க, வசமாக சிக்கிக்கொண்டார் தமிழன்பன். 

இதையடுத்து கிளி வளர்ப்பது, விற்பது தடை என்ற வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி அவரை வனத்துறைக் காவலர்கள் கைது செய்தனர். அத்துடன் அவரிடம் இருந்து 14 கிளிகளையும் பறிமுதல் செய்தனர். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கிளி முதல் அட்டவணையில் வராததால், தமிழன்பனுக்கு 3 மாத சிறை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.25,000 அபராதத்தை செலுத்துவதற்கு தமிழன்பன் ஒப்புக்கொண்டதாக, வனச்சரக ஆய்வாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

(தகவல்கள்: சாந்தகுமார், புதிய தலைமுறை செய்தியாளர், தாம்பரம்)