தடா பெரியசாமி புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஆயுதப் போராட்டம் To அதிமுக! யார் இந்த தடா பெரியசாமி?

ஆயுதப்போராட்டத்தில் ஆரம்பித்து அதிமுகவில் இணைந்திருக்கும் தடா பெரியசாமியின் அரசியல் பயணம் குறித்துதான் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கப்போகிறோம்..

இரா.செந்தில் கரிகாலன்

``சிதம்பரத்தில் நான் போட்டியிட்டால் திருமாவளவன் வெற்றி பெற முடியாது என்பதால் பாஜக என்னை நிற்க விடவில்லை. திருமாவளவனுக்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறது. கட்சியில் இருப்பவர்கள் யாரையும் அண்ணாமலை மதிப்பதில்லை. தமிழ்நாடு முழுவதும் பாஜக தோல்வியை தழுவும்’’ என அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருக்கும் அக்கட்சியின் பட்டியல் அணித்தலைவர் தடா பெரியசாமி.

அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி

இப்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக கொதித்திருக்கும் தடா பெரியசாமி, ஆரம்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பயணித்தவர்தான். அதுமட்டுமல்ல, ஒரு வெடிகுண்டு வழக்கில் கைதாகி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் மூன்றாண்டு சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுதலையானவரும்கூட. ஆயுதப்போராட்டத்தில் ஆரம்பித்து அதிமுகவில் இணைந்திருக்கும் தடா பெரியசாமியின் அரசியல் பயணம் குறித்துதான் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கப்போகிறோம்..

யார் இந்த தடா பெரியசாமி?

விசிக முதல் அதிமுக வரை...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்ட போது, அதன் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார் தடா பெரியசாமி. விசிகவின் தலைவராக திருமாளவளவனும் பொதுச் செயலாளராக தடா பெரியசாமியும் செயல்பட்டனர். தொடர்ந்து, 2001 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2004-ம் ஆண்டு விசிகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் தடா பெரியசாமி.

தடா பெரியசாமி, அண்ணாமலை

ஆயுதப் போராட்ட அமைப்பில் வாழ்க்கையைத் தொடங்கிய தடா பெரியசாமி, பின்னர் அதே கொள்கைகளோடு ஜனநாயக வழியில் பயணித்த விடுதலைச் சிறுத்தைகளில் சேர்ந்தபோது பெரியளவில் யாரும் அதிர்ச்சியடைவில்லை. ஆனால், பாஜகவில் அவர் இணைந்தபோது மிகப்பெரிய பேசுபொருளானது.

`சிறைவாசத்தின் போது நான் படித்த சித்தர்களின் பாரம்பர்யமும், பெருமையும் என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது’ என்று அதற்கு விளக்கம் தந்தார் தடா பெரியசாமி. 2004 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2010 காலகட்டத்தில் நந்தனார் சேவா மையம் என்ற அமைப்பைத் தொடங்கி , மாணவர்களுக்கு மாலை வகுப்புக்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி என சேவை செய்யத் தொடங்கினார். அதோடு, தியானம், யோகா, நீதி போதனை, விளையாட்டு போன்ற விஷயங்களையும் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்தார்.

அதோடு மண்ணுரிமை மீட்பு இயக்கம் எனும் அமைப்பைத் தொடங்கி, தமிழ்நாடு முழுவதுமுள்ள பஞ்சமி நிலங்களை மீட்கும் பணியில் இறங்கினார். முரசொலி நிலம், எல்.ஐ.சி பில்டிங் உள்ளிட்ட பல இடங்கள் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக அதிர்ச்சி கிளப்பினார்.

2021-ல் நடந்த தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, அமைச்சர் சி.வி.கணேசனிடம் தோல்வியடைந்தார் தடா பெரியசாமி. தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த தடா பெரியசாமிக்கு, 2022-ல் பட்டியல் அணித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2024 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதி வேலூர் முன்னாள் மேயர் காத்தியாயினிக்கு ஒதுக்கப்பட்டது.

முன்னாள் மேயர் காத்தியாயினி

இதனால் அதிருப்தியடைந்த தடா பெரியசாமி, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு, “2026 தேர்தலில் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதே என் வேலை” எனவும் சூளுரைத்திருக்கிறார். பாஜகவிலிருந்து விலகிய நிர்மல் குமார், காயத்ரி ரகுராம், கவுதமி என்கிற வரிசையில் தற்போது தடா பெரியசாமியும் இணைந்திருக்கிறார்.