Jallikattu pt desk
தமிழ்நாடு

அடங்கா காளைகளை அடக்கும் காளையர் ; தச்சங்குறிச்சியில் மதநல்லிணக்க ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்று வரும் இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அது எப்படி? பார்க்கலாம்...

webteam

தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு திருவிழா ஜாதி மத பாகுபாடுகளைக் கடந்து மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Jallikattu

பொதுவாக கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தச்சங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு, அங்கு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிறித்தவ ஆலய திருவிழாவாக இருந்தாலும், தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் இந்த கிராம மக்கள் மதங்களைக் கடந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை காலம் காலமாக நடத்தி வருகின்றனர். அப்படி இந்த ஆண்டும் விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டியை அந்த கிராமத்தைச் சேர்ந்த தென் போஸ்கோ இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் அக்கிராம மக்கள் இணைந்து விமர்சையாக நடத்தி வருகின்றனர்.

jallikattu
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன்பே அந்த கிராமத்தில் உள்ள பழைய அடைக்கல மாதா அன்னை ஆலய காளை ஒன்றும், அதேபோல் அந்த கிராமத்தில் மலை மேல் அமைந்துள்ள முருகன் கோயில் காளை ஒன்றும் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்பே மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இந்து, கிறிஸ்தவம் என்ற பாகுபாடின்றி தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.