தமிழ்நாடு

ஒரே நாளில் பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு - மாணவர்கள் குழப்பம்

webteam

ஆசிரியர் தகுதித் தேர்வும் பிஎட் இறுதியாண்டுத் தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பிஎட் தேர்வு ஜூன் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2017ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான், ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் தேர்வு தேதி நேற்றுதான் வெளியிடப்பட்டது. 

இதில் முதல் தாள் தேர்விற்கு ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேரும் இரண்டாம் தாள் தேர்விற்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அதேவேளையில் பிஎட் கடைசி ஆண்டு தேர்வும் ஜூன் 8 ஆம் தேதியே நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

பிஎட் கடைசி ஆண்டு தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவும் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். ஆனால் ஜூன் 8ஆம் தேதியன்று  ஆசிரியர் தகுதி தேர்வும் நடைபெற உள்ளதால் இரண்டு தேர்வுகளையும் ஒரே நாளில் எழுத முடியாத சூழல் நிலவுகிறது. 

இரண்டு தேர்வுகளும் மிக முக்கியம் என்பதால் எதை எழுதுவது என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். அடுத்த மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.