தமிழ்நாடு

தமிழக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை

தமிழக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை

webteam

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என்பதைக் கண்டறிய தெர்மல் ஸ்க்ரினிங் மேற்கொள்ளப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், கடந்த வாரத்தில் பேரவை உறுப்பினர்களுக்கு கைகளை சுத்தப்படுத்த உதவும் கிருமி நாசினி வழங்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து திமுக அளித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “கொரோனா பயம் அதிகமாக இருக்கிறது. போன் எடுத்தால் இருமி கொரோனா என்கிறார். சட்டமன்றத்தின் வெளியே, பொது இடங்களில் கொரோனா நடவடிக்கை என எங்கு பார்த்தாலும் கொரோனா பயம் உள்ளது. இந்தநிலையில் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்” எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ஏசியில் இருந்தால் கொரோனா பரவுமாம். உறுப்பினர்கள் அனைவரும் பயத்துடன் இருக்கிறோம். காப்பாத்துங்க சார். நாங்க எல்லாம் புள்ள குட்டிகாரர்கள். உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆனால் இடைதேர்தலை எதிர்கொள்வது மிக சிரமம்” என்று அவர் சொன்னவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் “கொரோனா பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை. 70 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் அச்சம் கொள்கிறார் போல” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “உங்களுக்கு வயது அதிகமாக இருந்தால் கூட நீங்கள் அச்சப்பட வேண்டாம். அதற்கு உரிய சிகிச்சை அளிக்கக் தயாராக உள்ளோம். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்குதான் பாதிப்பு இருக்கிறது. எனவே, வெளிநாட்டில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.