Fire accident pt desk
தமிழ்நாடு

தருமபுரி: பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து – அடுத்தடுத்து பரவியதால் தீயை அணைப்பதில் சிக்கல்

தருமபுரியில் பர்னிச்சர் கடைக்குள் பற்றி தீ, வங்கி மற்றும் நகைக் கடைகளுக்கு பரவிய நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க 9 மணி நேரமாக போராடி வருகின்றனர்.

webteam

செய்தியாளர்: விவேகானந்தன்

தருமபுரி நகர் நேதாஜி பைபாஸ் சாலையில், மனோகரன் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு 10 மணிக்கு கடை பூட்டப்பட்ட நிலையில், நள்ளிரவில் கடையில் தீப்பற்றியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தபோதும் பர்னிச்சர் கடையில் பற்றிய தீ, அருகேயுள்ள 2 வங்கிகள், தனியார் ஸ்கேன் சென்டர், வெள்ளி நகைகடை ஆகியவற்றுக்கும் பரவியது.

Fire accident

தீ கொளுந்து விட்டு எரிந்து வருவதால், 4 தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்களை கொண்டு வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நகராட்சி வாகனங்கள் மற்றும் டிராக்டர்களிலும் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல், தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

இதனிடையே, அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயால் ஏற்பட்டுள்ள புகை மண்டலத்தால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தருமபுரி – சேலம் இடையேயான வாகன போக்குவரத்து, மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது.