கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவது சாமானியர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ. 200 என விற்கப்பட்டது.
தக்காளி, சின்ன வெங்காயம் மட்டுமல்லாமல் பீன்ஸ், வெண்டக்காய் விலையும் அதிகரித்து இருக்கின்றன. இதுபோன்ற எந்த விலை உயர்வும் தங்களை பாதிக்கவில்லை, நெருக்கடி தரவில்லை என்கின்றனர் மாடித் தோட்டத்தை பராமரிப்பவர்கள். வீட்டிலேயே மாடித் தோட்டத்தின் மூலமாக தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், கீரை வகைகள், பச்சை மிளகாய், புடலங்காய் போன்ற காய்கறிகள் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
தற்போது சென்னையில் தனி வீடுகளில் மட்டுமல்லாமல், அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் பலரும் மாடித் தோட்டத்தை பராமரித்து வருகின்றனர். பலரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு சென்னையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மாடித் தோட்டம் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர்.
500 சதுர அடியில் இருந்து மாடித் தோட்டம் வளர்க்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் இதற்கு தோட்டக்கலைத்துறை சில உதவிகள் செய்து வரும் நிலையில் கூடுதலாக செய்ய வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.