தமிழ்நாடு

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலையில் 2 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீ

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலையில் 2 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீ

kaleelrahman

வாசுதேவநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் 2 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள செல்லுபுளி பீட் வனப்பகுதியில் கடந்த 27ஆம் தேதி திடீரென காட்டுத் தீ பற்றி எரிந்தது. உடனே புளியங்குடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், புளியங்குடி, சிவகிரி வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அவர்களோடு கோடைமலையாறு, தலையணை பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் மற்றும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் ஆகியோரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை அணைப்பதற்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் இருந்த செடிகொடிகளை பிடுங்கி அதன் மூலம் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு நாளாக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அங்குள்ள அரிய வகை மூலிகை செடிகள் எரிந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இந்த தீ விபத்திற்கு மர்ம நபர்கள் காரணமா? அல்லது வெப்பத்தின் தாக்கத்தால் தீ பற்றி உள்ளதா எனவும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.