Students protest pt desk
தமிழ்நாடு

தென்காசி: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி மாணவிகள் போராட்டம் - ஆர்டிஓ விசாரணை

செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மாற்றப்படுவதாக ஆர்டிஓ உறுதி அளித்ததின் பேரில் பள்ளி மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

webteam

செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையை மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவிகள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பல்வேறு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சுமார் 2 மணி நேரமாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த நிலையில், கோட்டாட்சியர் லாவண்யா பள்ளிக்கு வந்து போராட்டம் நடத்திய மாணவிகளிடம் பேச்சுவார்த்தை மற்றும் விசாரணையில் ஈடுபட்டார்.

அதேபோல் அங்கிருந்த ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். பின்னர் மாணவியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ‘தலைமை ஆசிரியை மாற்றப்படுவார்; மேலும் நீங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதிமொழி அளித்து அனைத்து மாணவிகளையும் பள்ளிக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து மாணவிகளை பள்ளிக்குள் அழைத்து சென்ற அவர், ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து தனியாக அவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தியதோடு, விசாரணையும் மேற்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.