தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த காளிபாண்டி என்பவர் ஹோட்டல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அப்போது மருத்துவர் எக்ஸ்ரே எடுக்க கூறிய நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள எக்ஸ்ரே எடுக்கும் மையத்தில் எக்ஸ்ரே எடுத்துள்ளார்.
அப்போது எக்ஸ்ரே ரிப்போர்ட்டை ஃபிலிமுக்கு பதிலாக காகிதத்தில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாக குற்றம் சாட்டி, இதுகுறித்து காளிபாண்டி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது பிலிம் தீர்ந்து விட்டதாக அலட்சியமாக பதில்அளித்ததாகவும் கூறி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு, அது சமூக வலைதளங்களிலும் வைரலானது. இது சில செய்திகளிலும் வெளியான நிலையில் பேசுபொருளாக மாறியது.
இந்தநிலையில் பல தரப்பினர் இதுகுறித்து சமூக வலைதளங்களில் அதிகமாக பேச தொடங்கிய நிலையில், சம்பவம் குறித்து தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் விளக்கம் அளித்துள்ளார்.
சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், “தென்காசி அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி 15 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தென்காசி மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் நவீன வசதியாக பேக்ஸ் ( PAX) என்னும் வசதி கடந்த ஒரு வருடமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது எக்ஸ்ரே பிரிவில் எடுக்கப்படும் எக்ஸ்ரே மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை அரங்கு ஆகிய இடங்களில் உள்ள கணணியில் மருத்துவர்கள் உடனடியாக பார்க்கும்படி வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எக்ஸ்ரே எடுக்கும் நபர்களுக்கு எக்ஸ்ரே படம் வழங்குவதற்கு, அரசு நிர்ணயித்தபடி ஐம்பது ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு, வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவர்களுக்கு கையிருப்பில் கட்டாயம் எக்ஸ்ரே பிலிம் வேண்டும் எனும் பட்சத்தில் மட்டும் 50 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது.
நோயாளிகளுக்கு அவர்களுடைய பணம் தேவை இல்லாமல் செலவழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டு A4 தாளில் பிரிண்ட் எடுத்துக் கொடுக்கப்படுகிறது. ஏ போர் தாளில் பிரிண்ட் எடுத்துக் கொடுக்கப்படும் வசதி இலவசமாக செய்யப்படுகிறது.
எக்ஸ்ரே பிலிம் கட்டாயம் தேவைப்படும் நோயாளிகளுக்கும், நிர்பந்தித்து வேண்டும் என கேட்கும் நோயாளிகளுக்கும் அரசு நிர்ணயித்த தொகையான ஒரு படத்திற்கு 50 ரூபாய் பெற்றுக் கொண்டு வழங்கப்படுகிறது.
இந்த நபர் A4 தாளில் எக்ஸ் ரே பிரிண்ட் எடுத்து மதியம் 12 45 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்றுள்ளார். அவர் இவர் கையில் இருந்த தாளை வாங்கிப் பார்க்காமல் கணினியில் இவருடைய படத்தைப் பார்த்து எலும்பு முறிவு எதுவும் இல்லை எனவே மூன்று நாட்களுக்கு மாத்திரைகளும் கைக்கு ஓய்வும் எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும் எனக் கூறியிருக்கிறார்.
தன் கையில் உள்ள எக்ஸ்ரே தாளை வாங்கி சரியாக பார்க்காமல் மருத்துவர் அக்கறையில்லா!மல் சிகிச்சை அளித்து விட்டார் என்ற தவறான புரிதலோடு புகார் அளித்துள்ளார்” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் எக்ஸ்தள பக்கத்திலும் இதுகுறித்த விளக்கம் வெளியாகி உள்ளது.