தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியர் பணிக்காக விண்ணப்ப விநியோகம் - அலைமோதிய பட்டதாரிகள்

தற்காலிக ஆசிரியர் பணிக்காக விண்ணப்ப விநியோகம் - அலைமோதிய பட்டதாரிகள்

webteam

தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காக விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பட்டதாரிகள் குவிந்தனர்.

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளதால், பல பள்ளிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனைச் சரி செய்யும் வகையில் 10ஆயிரம் ரூபாய் மாத ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.

தஞ்சையிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் பட்டதாரிகள் கூட்டம் அலைமோதியது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை வரை தற்காலிக ஆசிரியர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டெட் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு, அவர்கள் விண்ணப்பத்தில் அளித்துள்ள தொலைப்பேசி எண் வாயிலாக விவரம் தெரிவிக்கப்படும் என்றும், அவர்கள் திங்கட்கிழமை முதல் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.