கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பயிற்சி இல்லாத தற்காலிக ஓட்டுனர் பணிமனையில் இருந்து பேருந்தை எடுக்கும் போது வாய்க்காலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து 5 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி விருத்தாசலத்தில் அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் போதிய பயிற்சி இல்லாத தற்காலிக ஓட்டுனரை கொண்டு சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விருத்தாசலம் பணி மனையில் இருந்து தற்காலிக ஓட்டுநர் பாரதி பேருந்தை இயக்க முற்பட்ட போது பிரேக் பிடிக்காததால் பேருந்து வாய்க்காலில் இறங்கியது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குவதால் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். நேற்று இதே பணிமனை அருகே தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய 2 பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.