ஈரோட்டில் பவானீஸ்வரர் ஆலயத்தின் தெற்கு பிரகார சுவர் இடிந்து விழுந்ததில் 63 நாயன்மார் சிலைகள் சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் அருகே பவானி ஆற்றின் கரையில் பவானீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தெற்குப் பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து கோயிலின் தெற்குப் பகுதியில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவருக்கு பதிலாக புதியதாக சுற்றுச்சுவர் கட்டி பலப்படுத்தும் பணி ரூபாய் 40 லட்சம் செலவில் நடைபெற்று வந்தது.
ஏற்கனவே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதி கோயிலின் அடிப்பாகத்தில் உள்ள மண் முழுவதும் வலுவிழந்து காணப்பட்ட நிலையில், இன்று காலை ஆறு மணி அளவில் தெற்கு பிரகாரச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், 63 நாயன்மார்கள் சிலைகள் சேதமடைந்தன.
இதன் காரணமாக கோயிலின் நடை சாத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.