தமிழ்நாடு

தெய்வமாக தேர்ந்தெடுக்கப்படும் ஏழு சிறுமிகள்: மதுரை அருகே விநோதம்

தெய்வமாக தேர்ந்தெடுக்கப்படும் ஏழு சிறுமிகள்: மதுரை அருகே விநோதம்

Rasus

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏழு சிறுமிகளை தெய்வக்குழந்தைகளாக தேர்ந்தெடுக்கும் விநோத திருவிழா தொடங்கியுள்ளது. 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க அறுபது கிராமங்களின் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள்.

மேலூர் அருகே வெள்ளலூர், கோட்டநத்தாம்பட்டி, அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, அழகிச்சிப்பட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள 60 கிராமங்களை உள்ளடக்கியது வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்படுகின்றது. இங்குள்ள ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படுவதையொட்டி, 7 சிறுமிகள் தெய்வக் குழந்தைகளாகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக இந்தக் கிராமத்தை உள்ளடக்கிய 11 கரைகளைச் சேர்ந்த 22 அம்பலகாரர்கள், 22 இளஞ்கச்சிகள் முன்னிலையில் 7 பெண்குழந்தைகளை, பூசாரி தேர்ந்தெடுத்தார், இந்தத் தேர்வுக்காக அதிகாலை முதலே 11 கரைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுடைய பெற்றோருடன் காத்திருந்தனர்.

தெய்வமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஏழு சிறுமிகளும் 15 நாட்கள் கோயிலிலேயே தங்கியிருந்து, 60 கிராமங்களுக்கும் சென்று பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்குவார்கள். இந்த 15 நாட்களும் கோயிலில் தங்கியுள்ள சிறுமிகளுக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆபரணம் மற்றும் உணவு வகைகளைச் சிறுமிகளுக்கு வழங்குவதும் வழக்கமாக இருக்கிறது.