ஒட்டன்சத்திரம் அருகே கோயில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெயில் நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த விழாவில் கோயிலைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி ஏழு தினங்கள் சிறப்பாக வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோயில் திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்றிரவு திடீரென கோயிலுக்கு வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பொதுமக்கள் ஒன்றிணைந்து தேவராட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.
அப்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.