மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. நகரின் பல பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலும் முடங்கியதால், அவசர தேவைக்கு பிறரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
சென்னையை பொறுத்தவரை, 36,442 செல்ஃபோன் கோபுரங்கள் உள்ளன. இதில் ஏர்டெல் நிறுவனத்திற்கு 9,607 கோபுரங்களும், வோடஃபோன் நிறுவனத்திற்கு 7,768 கோபுரங்களும், ஜியோ நிறுவனத்திற்கென 6,190 செல்ஃபோன் கோபுரங்களும் உள்ளன. புயல் காரணமாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மொத்தமுள்ள 36,000 செல்ஃபோன் கோபுரங்களில், 20,000 கோபுரங்களுக்கு மட்டுமே மின் இணைப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பல இடங்களில் தொலைத்தொடர்பு சேவைகளை பொதுமக்களால் முழுமையாக பெறமுடியாத நிலை ஏற்பட்டது. 5ஜி சேவை இருந்தால் மட்டுமே இணைய சேவையை முறையாக பெற முடியும் என்ற சூழல் உள்ள நிலையில், மின் இணைப்பு இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு 2ஜி சேவையை மட்டுமே வழங்க முடிந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தென் சென்னை மற்றும் நகரின் புறநகர் பகுதிகளில், தொலைத்தொடர்பு சேவை பெற முடியாமல், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
செவ்வாயன்று 60 சதவீதம் அளவுக்கு இணைய சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதன் நிலவரப்படி 80 சதவீதம் அளவுக்கு இணைய சேவைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 20 சதவீதம் பேருக்கு மட்டும் இணைய சேவைகள் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் மாலைக்குள் 95 சதவீதம் அளவுக்கு இணைய சேவைகளை வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.