ராஜ்குமார் முகநூல்
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி|வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கும்மிடிப்பூண்டியில் கடந்த 4-ஆம் தேதி வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

PT WEB

செய்தியாளர்:எழில்

கும்மிடிப்பூண்டியில் கடந்த 4-ஆம் தேதி வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்தவர் கல்யாணி. இவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கடந்த 4-ஆம் தேதி  ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது கல்யாணியின் மகன் ராஜ்குமார் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், திடீரென வீட்டிற்கு சென்று தாழிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார் ராஜ்குமார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்த போது, உடலில் தீப்பற்றிய நிலையில், ராஜ்குமார் அலறியடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். உடனடியாக காவல் துறையினர் தீயணைப்பு கருவி உதவியுடன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அருகில் இருந்த கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.

ராஜ்குமாரின் உடலில், 50% தீக்காயம் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகிய மூவரை பணியிட மாற்றம் செய்தும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.