தமிழ்நாடு

தகாத வார்த்தைகளால் திட்டியதாக இளம்பெண் தற்கொலை முயற்சி - விஏஓ மீது புகார்

தகாத வார்த்தைகளால் திட்டியதாக இளம்பெண் தற்கொலை முயற்சி - விஏஓ மீது புகார்

webteam

மதுரையில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் மானபங்கப்படுத்தியதாக கூறி இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை துவரிமான் அருகேயுள்ள இந்திராகாலனி பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் பெண் அன்னலெட்சுமி. அவரது வீட்டின் அருகே வாடிப்பட்டி தாலுகா கீழசின்னம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் திலீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி திலீபனின் வீட்டில் உள்ள பசுவானது அன்னலெட்சுமியின் வீட்டிற்குள் சென்றுள்ளது. இது குறித்து திலிபனிடம் அன்னலெட்சுமி புகார் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதனை தொடர்ந்து அன்னலெட்சுமியின் வீட்டிற்கு வந்த திலீபன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி மானபங்கப்படுத்த முயன்றதாகவும், இதனால் மனமுடைந்த அன்னலெட்சுமி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி மீட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

மேலும் இது குறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து புகார் மனு அளித்தனர். அதில் பெண்களிடம் தகாத முறையில் செயல்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.