தமிழ்நாடு

நெல்லை: அரசு விதிமுறைகளை மீறி கட்டணம் வசூல் - கொட்டும் மழையில் பேராசிரியர்கள் போராட்டம்

நெல்லை: அரசு விதிமுறைகளை மீறி கட்டணம் வசூல் - கொட்டும் மழையில் பேராசிரியர்கள் போராட்டம்

Sinekadhara

அரசு நிதி உதவியை பெற்றுக்கொண்டு இயங்கும் கல்லூரிகள், அரசு நிதி உதவிபெறும் பாடங்களுக்கு அரசு நிர்ணயித்த விதிமுறைகளை மீறி வசூலிக்கும் அதிக கட்டண கொள்ளையை தடுக்க வலியுறுத்தி நெல்லை கல்லூரி இணை இயக்குநரக அலுவலகம் முன்பு கல்லூரி பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு நிதி உதவியை பெற்றுக்கொண்டு இயங்கும் கல்லூரிகள் அரசு நிதி உதவிபெறும் பாடங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மீறி அதிகமாக கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரியும், அரசு விதிகளின்படி மூத்த பேராசிரியர்களை துறை தலைவராக நியமிக்க வேண்டும் எனவும் பேராசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசு விதிமுறைகளின்படி மூத்த பேராசிரியர்களில் ஒருவரை தேர்வாணையர் ஆக நியமிக்க வேண்டும் எனவும், பணியில் மூத்த பேராசிரியரை கல்லூரி முதல்வர் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் பேட்டையில் உள்ள திருநெல்வேலி கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு இன்று மூட்டா சார்பில் பேராசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த உள்ளிருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக கொட்டும் மழையிலும் தொடர்கிறது. பல அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பேராசிரியர்களை தரக்குறைவாக பேசியதை கண்டித்தும், அரசு நிதி உதவிபெற்று இயங்கும் கல்லூரியில் அரசு நிதி உதவிபெறும் பாடங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.