தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்களின் பதவி உயர்வு ரத்து !

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்களின் பதவி உயர்வு ரத்து !

webteam

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவளித்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் அரசு தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு புதிய ஆட்களை எடுத்தது. அத்துடன் பணிக்கு திரும்பாத நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை அரசு இடைநீக்கம் செய்தது. இந்தச் சூழலில் ஜக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். 

இந்த சுழலில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாத இறுதியில் ஆசிரியர்கள் பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளான ஆசிரியர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஆசிரியர்கள் உள்பட, ஆயிரத்து 564 பேருக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விதிமுறைகளின்படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளான ஆசிரியர்கள், பதவி மூப்பு பட்டியலில் வைக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.