தமிழ்நாடு

டீக்கடைக்கு சென்ற டிரைவர் - கார் ஓட்ட முயன்ற ஆசிரியை விபத்தில் சிக்கி உயிரிழப்பு

கலிலுல்லா

கார் டிரைவர் டீக்கடைக்கு சென்றுவிட்ட நிலையில், தானே காரை இயக்க முயன்ற ஆசிரியை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அமராவதி (44). தர்மபுரியில் வசித்து வரும் இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு சரியான நேரத்திற்கு சென்றுவர மாருதி கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அவருக்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால், ஓட்டுநரையும் நியமித்துள்ளார். தன்னுடைய காரில் தினமும் தருமபுரியிலிருந்து பள்ளிக்கு சென்று வந்துகொண்டிருந்தநிலையில், நேற்று மாலை பள்ளி வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல ஓட்டுநரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.

ஓட்டுனர் அருகே இருந்த டீ கடைக்கு சென்றுவிட்டதால், அமராவதி தானே காரை ஓட்ட முயற்சித்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கார் அருகே இருந்த பள்ளிக்கு சொந்தமான கட்டிடத்தில் மோதியுள்ளது. இதில் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த அமராவதி அவசர ஊர்தி மூலம் தருமபுரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.