தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடமாற்றம்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடமாற்றம்

webteam

மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர், புதியதலைமுறை செய்தி எதிரொலியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தியநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் தைரியநாதன். இவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்தது மட்டுமல்லாமல் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. ஆசிரியர் குறித்து கிராம மக்கள் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தைரியநாதன் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால் அதனைத்தொடர்ந்தும் ஆசிரியர் தொடர்ந்து அதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.இதனைத்தொடர்ந்து மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக தலைமை ஆசிரியரிடம் புகார் கடிதம் எழுதி சமர்ப்பித்த நிலையில், முதன்மை கல்வி அலுவலர் அவரை வேறுப் பள்ளிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால் தைரியநாதன் அதிகாரியிடம் பேசி மீண்டும் வைத்தியநாதபுரம் உயர்நிலைப்பள்ளிகே வந்ததாகத் தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தைரியநாதனை உடனே பணிமாற்றம் செய்ய வேண்டும் என மனு அளித்ததோடு, அவர் மீண்டும் இந்தப் பள்ளியில் பணி அமர்த்தப்பட்டால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறினர். இது குறித்தான செய்தித் தொகுப்பு புதியதலைமுறையில் வெளியானது.

இந்நிலையில் குற்றசாட்டுக்கு உள்ளான ஆசிரியர் தைரியநாதனை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் வைத்தியநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதனைக் கேள்விப்பட்ட வைத்தியநாதபுரம் மற்றும் குருமணாங்குடி கிராமமக்கள் புதியதலைமுறைக்கு நன்றி தெரிவித்தனர்.