தமிழ்நாடு

எங்கு பணியாற்றினாலும் எம் பணி தொடரும் : ஆசிரியர் பகவான்

எங்கு பணியாற்றினாலும் எம் பணி தொடரும் : ஆசிரியர் பகவான்

webteam

தேசிய அளவில் ஹீரோவான ஆசிரியர் பகவான் போன்று தமிழகத்தின் சிறந்த ஆசிரியர்கள் குறித்து புதிய தலைமுறையில் வெளிவந்த தொகுப்பு.

பணிமாறுதல் பெற வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கதறி அழுத காட்சி காண்போரை மனம் உருகச் செய்ய, மாணவ - மாணவிகள் கண்ணீர் விட்டு அழுததால் தேசிய அளவில் ஹீரோவாக திகழ்கிழார் பகவான். அவரைப் போன்று சிறந்த ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள சில பள்ளியை மேம்படுத்தி கொண்டுதான் இருகிறார்கள். 

சொந்தச் செலவில் வேன் வாங்கிக் கொடுத்த கருணாமூர்த்தி:

காஞ்சிபுரம் மாவட்டம் முடையூர் என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் 3 கி.மீ காட்டுப் பகுதியில் நடந்து வர வேண்டிய சூழல். இதனை உணர்ந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கருணாமூர்த்தி, சொந்த செலவில் ஆம்னி வேன் வாங்கி மாணவர்கள் பயன்பாட்டிற்காக கொடுத்துள்ளார். பெட்ரோல் மற்றும் ஓட்டுநர் ஊதியத்தை அப்பள்ளி ஆசிரியர்களே தங்களது சம்பளத்தில் பகிர்ந்து வழங்குகின்றனர்.

பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்திய தென்னவன்:

மதுரையில் யா.ஒத்தக்கடையில் 1933ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2010ஆம் ஆண்டு வரை சுமார் 300 மாணவர்கள் மட்டுமே பயின்றனர். தென்னவன் தலைமை ஆசிரியராக பதவியேற்ற பிறகு மாணவர்கள் எண்ணிக்கை 550 ஐ தாண்டியது. காரணம், அரசை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்காமல் தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோரின் உதவியுடன் பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தினார். ஸ்மார்ட் வகுப்பு, ஆங்கிலப் பயிற்சி, கலைப் பயிற்சி என அனைத்து சிறப்பு வகுப்புகளும் மாணவர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்தவர் தென்னவன்.

படிக்கச் சொல்லி காலில் விழும் பாலு:

விழுப்புரம் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலு. இவர் படிப்பில் ஆர்வம் காட்டாத மாணவர்களின் காலில் விழுந்து படிக்கச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த அணுகுமுறையை எதிர்பாராத மாணவர்கள் அதன்பிறகு படிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்குவதாக அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். காட்சிகளில் வருவதற்காக இவற்றை செய்யவில்லை, மாணவர்களின் நலனுக்காக மட்டுமே செய்வதாகக் கூறி தன்னைக் காட்சி எடுக்க மறுத்துவிட்டார் தலைமை ஆசிரியர் பாலு.

இப்படி தாம் செய்யும் பணியை நேசித்தும், அதற்காக பல அர்ப்பணிப்புகளை செய்யும் பல ஆசிரியர்கள் தொடர்ந்து பல இடங்களில் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்த நேரத்திலும் பகவான் கூறுவது:  'எங்கு சென்றாலும் இப்படித்தான் பணி செய்யப் போகிறேன். இத்தகைய பணியை எந்த இடத்திலும் செய்யத் தயாராக இருக்கிறேன்’..